விராட்கோலி மறுபடியும் நல்ல நிலைக்கு திரும்புவார்: ஜெயவர்த்தனே நம்பிக்கை!
By : Thangavelu
உலகளவில் மிகவும் தலை சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வருபவர் விராட் கோலி. சமீபகாலமாக அவர் தற்போது பேட்டிங்கில் நல்ல நிலையில் இல்லை. தற்போது அவர் டெஸ்ட், ஒருநாள்போட்டி, 20 ஓவர் என்று ரன்களை குவிக்க முடியாமல் திணறி வருகிறார். விராட் கோலி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின்னர் இதுவரையில் சர்வதேச போட்டியில் சதம் அடிக்கவே இல்லை. மிகவும் மோசமான ஆட்டத்தை கொடுத்த காரணத்தினால் இந்திய அணி அவருக்கு ஓய்வு கொடுத்திருந்தது.
மேலும் அவரது ரசிகர்களும் விராட்கோலி பேட்டிங் குறித்து மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் விராட் கோலியின் இடம் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி அவரது இடத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கலாம் என்கின்ற விவாதமும் எழுந்துள்ளது.
இதற்கு மத்தியில் ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடித்துள்ளார். இப்போட்டியின் அடிப்படையில் தான் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு அமையும். இந்நிலையில், விராட் கோலி மீண்டும் நல்ல நிலைமைக்கு திரும்புவார் என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் கூறும்போது, விராட் கோலி தற்போது எதிர்கொண்டு வரும் சூழல் மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆனால் அவர் ஒரு நல்ல விளையாட்டு வீரர். அவர் மோசமான நிலையில் இருந்து மீண்டும் வருவதற்கான திறமைகளை பெற்றவர். கடந்த காலங்களில் அவர் இது போன்ற சூழ்நிலையை கடந்துள்ளார். அதே போன்று விராட் கோலி மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Maalaimalar