ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரொக்கப் பரிசு: மத்திய அமைச்சர் அறிவிப்பு..
By : Bharathi Latha
சீனாவின் ஹாங்சோ நகரில் அண்மையில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கம் வென்ற ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா புதுதில்லியில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று வீரர்களைப் பாராட்டினார். போட்டியில் கலந்துகொண்ட, பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 76 வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த விளையாட்டுப் போட்டியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தனிநபர் பிரிவில் 3 தங்கம், 6 வெள்ளி மற்றும் 7 வெண்கலம் என மொத்தமத் 16 பதக்கங்களை வென்றனர். குழுப் பிரிவில் 2 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என மொத்தம் எட்டு பதக்கங்களை வீரர்கள் வென்றுள்ளனர்.
பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ராஜ்நாத் சிங் ரொக்கப் பரிசுகளை அறிவித்தார். தங்கப்பதக்கம் வென்றவர்களுக்கு ரூ. 25 லட்சமும், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.15 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார். 2023 செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் பாதுகாப்புப் படைகள் சார்பில் மூன்று விளையாட்டு வீராங்கனைகள் உட்பட 88 வீரர்கள் 18 பிரிவுகளில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கை நினைபடுத்தினார். அவர் இந்திய தடகள வீரர்களுக்கு இன்றும் வழிகாட்டியாக திகழ்வதாக அமைச்சர் கூறினார்.
தற்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் வெளிப்படுத்தியுள்ள செயல்திறன் மற்றும் அவர்கள் வென்றுள்ள பதக்கங்கள் நாட்டின் இளைஞர்களை விளையாட்டில் ஊக்குவிக்கும் என்று ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்தார். போர்க்களமாக இருந்தாலும் சரி, விளையாட்டு மைதானமாக இருந்தாலும் சரி, அனைத்திலும் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், கடின உழைப்பு மற்றும் தேசத்திற்காக பணி செய்ய வேண்டும் ஆர்வம் ஆகிய நோக்கங்களுடன் வீரர்கள் எப்போதும் செயல்படுகின்றனர் என அமைச்சர் கூறினார். இந்த நற்பண்புகள் விளையாட்டில் பதக்கங்களைப் பெற வர உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார்.
Input & Image courtesy: News