பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள்: சச்சின் டெண்டுல்கர்.!
சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அது போன்று தனது பிறந்த நாளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து சொல்வது உண்டு.
By : Thangavelu
கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு உதவுகின்ற வகையில், பிளாஸ்மா ரத்த தானம் செய்ய முன்வாருங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 48வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அது போன்று தனது பிறந்த நாளுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து சொல்வது உண்டு.
இந்நிலையில், தனது பிறந்தநாளுக்காக சச்சின் டெண்டுல்கர் ஒரு ட்விட்டர் மூலம் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவில், ''உங்களின் அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துக்களால் இந்தநாள் மேலும் சிறப்பாக அமைந்துள்ளது. நான் உங்களுக்கு எப்போதும் உண்மையுள்ளவனாக இருப்பேன்.
மேலும், கடந்த மாதம் நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 3 வாரம் தனிமையில் இருந்தேன். கொரோனாவில் இருந்து குணமடைவதற்கு மருத்துவர்கள் தனக்கு உதவினர். தனக்காக அனைவரும் பிரார்த்தனை செய்து உறுதுணையாக இருந்தீர்கள்.
கடந்த வருடம் பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தை தொடங்கியிருந்தேன். இந்த நேரத்தில் ஒரு செய்தியை கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள். அந்த உதவிகளை செய்தால் மற்ற நோயாளிகள் பயனடைவார்கள். எனவே பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் என கூறியுள்ளார்.