சையது முஷ்டாக் அலி டி-20 டிராபி தொடரில் அரையிறுதிக்கு போராடி தகுதிபெற்றது தமிழ்நாடு அணி!
சையது முஷ்டாக் அலி டி-20 டிராபி தொடரில் அரையிறுதிக்கு போராடி தகுதிபெற்றது தமிழ்நாடு அணி!
By : Pravin kumar
இந்தியாவின் உள்ளூர் டி20 அணிகளுக்கான தொடரான சையது முஷ்டாக் அலி கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் ஒரு காலிறுதிப் போட்டி அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் தமிழகம் மற்றும் இமாச்சல பிரதேசம் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சை தேர்வு செய்தது களமிறங்கியது.
இமாச்சல பிரதேச அணிக்கு நட்சத்திர வீரரான ராணா 28 ரன்களும், நிதின் ஷர்மா 26 ரன்களும் எடுத்தனர். அதேநேரம் அந்த அணியின் கேப்டன் ரிஷி தவான் சற்று நிதானமாக விளையாடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டார். மற்ற வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழக்க 20 ஓவர்களில் 135 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது.
பார்ப்பதற்கு சற்று எளிதான இலக்கு போல இருக்கிறது என்ற நம்பிக்கையில் களமிறங்கிய தமிழக வீரர்களுக்கு சற்று தடுமாற்றம் நேர்ந்தது. தமிழக அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன் 7 ரன்களுக்கும், நிஷாந்த் 17 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் வெறும் 66 ரன்கள் எடுத்திருந்த போது 5 விக்கெட்டுகளை இழந்து தமிழ்நாடு அணி மிகவும் தடுமாற்றத்துடன் விளையாடி வந்தது.
ஆனால் மறுமுனையில் நட்சத்திர வீரர் பாபா அபராஜித் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொள்ள ஆல்ரவுண்டர் ஷாருக்கான் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார்.
இவர் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என 19 பந்துகளில் 40 ரன்கள் விளாசி தமிழக அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். மறுமுனையில் நிதானமாக ஆடிய அஜித் 52 ரன்கள் எடுத்திருந்தார். 18 ஓவர்களில் சேஸ் செய்து வெற்றி கண்ட தமிழக அணி இமாசல பிரதேச அணியை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதிரடியாக ஆடி வெற்றியை உறுதிசெய்த ஷாருக்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.