தமிழக வீரர் நடராஜன் ஒரு நாள் அணியிலும் இடம் பிடித்து அசத்தல்.!
தமிழக வீரர் நடராஜன் ஒரு நாள் அணியிலும் இடம் பிடித்து அசத்தல்.!

By : Pravin kumar
நடப்பு ஐபிஎல் தொடரில் தனது அசாத்தியமான பந்து வீச்சை வெளிப்படுத்திய தமிழக வீரர் நடராஜனுக்கு ஆஸ்திரேலிய தொடரின் ஆரம்பத்தில் கூடுதல் பந்துவீச்சாளராக இந்திய அணியில் இணையும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு கூடுதல் பந்துவீச்சாளர் இடத்தில் இருந்து வருண் சக்கரவர்த்தி அடைந்த காயம் காரணமாக டி20 இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலிலும் அவரது பெயர் பிசிசிஐ மூலம் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மேலும் இதற்கான சரியான காரணத்தையும் பி.சி.சி.ஐ தெளிவாக விளக்கியுள்ளது.
அதன்படி இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி முதுகுவலியால் அவ்வப்போது சிரமப்பட்டு வருவதால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் நேரத்தில் மாற்று வீரராக தமிழக வீரர் நடராஜன் இந்திய ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார் என்று சரியான தகவலை வெளியிட்டுள்ளது.
அதே போல் டெஸ்ட் தொடரில் இடம்பெற்ற இஷாந்த் சர்மா முழு உடல் தகுதி பெறாத நிலையில் இன்னும் ஆஸ்திரேலியா செல்லாமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக டெஸ்ட் அணியிலும் நடராஜன் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
