டி-20 கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்ய இதுவே சரியான நேரம் - இங்கிலாந்து முன்னாள் வீரர்!
டி-20 கேப்டனாக ரோஹித் சர்மாவை தேர்வு செய்ய இதுவே சரியான நேரம் - இங்கிலாந்து முன்னாள் வீரர்!

By : Pravin kumar
ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் தொடரை வென்று அசத்தி உள்ளது மும்பை இன்டியன்ஸ் அணி. ரோஹித் சர்மா தலைமையில் ஐந்தாவது முறையாக ஐ.பி.எல் தொடரை வென்றதன் மூலம் அதிக முறை கோப்பை வென்ற கேப்டன் என்ற சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் அதற்கு தலைகீழாக இந்திய அணியின் கேப்டன் வீராட் கோலி இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல் தொடரை வென்றதில்லை என்ற மோசமான நிலையில் உள்ளார். இதுவே தற்பொழுது பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.
ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் குரல் ஏழுந்து வருகின்றது. ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் வீராட் கோலியை விமர்சித்து கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என கருத்து தெரிவித்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் இதே கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாசர் ஹூசைன் கூறுகையில், "ரோகித் சர்மா கேப்டன் பதவியில் அமைதியாக செயல்படுகிறார். அவர் கூல் கேப்டன். மேலும் அவர் ஜென்டில்மேன் ஆவார். ஐ.பி.எல் போட்டியில் பல்வேறு உலக நாடுகள் மற்றும் இந்திய வீரர்களை கொண்ட அணியை அவர் சிறப்பாக வழி நடத்தினார். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கிறார். 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலக இதுவே சரியான நேரம்.
ரோகித் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டும். அவரது சாதனைகள் இதை சொல்லும். ரோகித் சர்மா திறமை வாய்ந்த பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டியின் அனைத்து காலக்கட்டத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவர் ஒருவராவார். 50 ஓவர் போட்டிகளில் சில இரட்டை சதங்களை அடித்துள்ளார்” என்றார்.
