தி.மு.க ஆட்சி அமையவுள்ள நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா - வழக்கறிஞர்கள் குழுவும் கூண்டோடு ராஜினாமா!
By : Muruganandham
தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சி அமையவுள்ள நிலையில், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
இதற்கான கடிதத்தை தமிழக முதல்வருக்கு நேற்றே அனுப்பி, தன்னை நியமித்து முழு ஒத்துழைப்பு அளித்த தமிழக முதல்வர், சட்ட அமைச்சர், அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
விஜய் நாராயண், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் நியமிக்கப்பட்டார். இவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த வழக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்த வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அரசுக்கு ஆதரவாக ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் குழு கூண்டோடு ராஜினாமா செய்து வருகிறது. நேற்று காலை முதலே பல அரசு வழக்கறிஞர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை அனுப்பி வருகிறார்கள்.
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் உட்பட பல வழக்கறிஞர்கள் கூண்டோடு ராஜினமா செய்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.