எங்களிடம் கோவில் நிர்வாகத்தைத் தருவீர்களா? - ராமநாதபுரம் மன்னர் வாரிசு அதிரடி!
By : Yendhizhai Krishnan
ஈஷா யோகா மையத்தின் சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவில்களை அரசுக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க பிரச்சாரத்தை முன்னெடுத்ததில் இருந்து திமுக அரசின் நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஜக்கி வாசுதேவைப் பற்றி தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறார். 'ஓலமிடும் ஓநாய்கள்' என்றெல்லாம் அவரைக் கீழ்த்தரமாக விமர்சித்ததால் பழனிவேல் தியாகராஜனுக்கும் ஜக்கி ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை முற்றிக் கொண்டிருக்கிறது.
ஜக்கி வாசுதேவ் விதிமீறலில் ஈடுபட்டிருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாமே, தனிநபர் தாக்குதல் ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பழனிவேல் தியாகராஜன் தொடர்ந்து கோவில்கள் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்று அதற்கு காரணங்களை அடுக்கி வரும் நிலையில் வேறொரு தரப்பில் இருந்தும் அவரது கருத்துக்கு பதில் வந்துள்ளது.
கோவில்களை விடுவிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கோவில்களின் நிர்வாகம் பக்தர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றனர். பழனிவேல் தியாகராஜன் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது 'கோவில்கள் அரசர்களால் கட்டப்பட்டன' என்றும் அப்படி இருக்கையில் 'அவை யாருக்கு சொந்தமானவை, எந்த பக்தரின் கையில் அவற்றை ஒப்படைப்பது' என்றும் கேள்வி எழுப்பி கோவில் நிர்வாகத்தை பக்தர்கள் கையில் ஒப்படைக்க முடியாது என்று பதிலளித்துள்ளார்.
இதையடுத்து ராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த சேதுபதி மன்னர் வம்சத்தின் வாரிசு ஆர்.எஸ்.ஆர்.ராம்பிரசாத் தி இந்து நாளிதழுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "ராமநாதபுரத்தைச் சுற்றியுள்ள 56 கோவில்களை நிர்வகித்த ராமநாதபுர சமஸ்தானத்தின் வாரிசு நான். எனது அக்கா/அண்ணன் மகள் நிர்வாகக் குழுவின் தலைவராக இருக்கிறார். எனினும் அதிகாரம் முழுக்க அறநிலையத் துறையின் கையிலேயே உள்ளது. எனவே அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை."
கோவில்களை விடுவிப்பதற்கு எதிரான முக்கிய கருத்தாக 'கோவில்கள் அரசர்களால் கட்டப்பட்டன. அப்படியென்றால் அவற்றை அரச குடும்பத்தினர் தான் நிர்வகிக்க வேண்டும்" என்பது முன்வைக்கப்படுகிறது. இப்போது அரச குடும்ப வாரிசு ஒருவரே இதற்கு பதிலளித்திருக்கிறார். இதற்கு என்ன விதமான மழுப்பல் பதில் கிடைக்கப்போகிறதோ..
The Hindu interview: https://www.thehindu.com/news/national/tamil-nadu/demand-for-freeing-temples-from-hrce-dept-is-nonsense/article34561361.ece
The letter to the editor: https://www.thehindu.com/opinion/letters/letters-to-the-editor-may-18-2021/article34582042.ece