உணவுத்துறை அமைச்சர் வந்து தொடங்கி வைத்ததோடு சரி..! கோவையில் இன்னும் செயல்பாட்டுக்கு வராத கொரோனா கேர் சென்டர்!

By : Muruganandham
கோவையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்றின் அளவு, வயது, மருத்துவரின் பரிந்துரைஅடிப்படையில் தற்காலிக சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனை களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 1,500 முதல் 1,800 பேர் வரை தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். நாள்தோறும் 5,000 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வீடுகள்தோறும் சென்று சளி, காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களைக் கண்டறியும் பணியில் 2,400 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அன்னூர் அருகே உள்ள நவ பாரத் பள்ளியில் 150 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கொரானோ கேர் மையத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடந்த மே 31ஆம் தேதி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அன்னூர் பகுதியில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் அங்கு சென்றபோது, சிகிச்சைக்காக அவர்களை அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்துக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்படாததால், இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நியூஸ் ஜெ ஊடகத்தில் செய்தி வெளியாகி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளது.
தற்போதைக்கு 20 படுக்கைகள் கொண்ட அன்னூர் அரசு மருத்துவமனையை மட்டுமே நம்பியிருப்பதாக அப்பகுதி மக்கள் விரக்தியுடன் கூறுகின்றனர். அரசு உடனடியாக கொரோனா சிகிச்சை மையத்தை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
