"கொரோனா இரண்டாம் அலை முடியவில்லை, மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது" - எச்சரிக்கை!
By : Parthasarathy
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் பாதிப்பு குறைந்து கொன்டே வருகிறது, இதன் காரணமாக தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை விதித்துள்ளது. எனினும், தமிழகத்தில் புதிதாக டெல்டா வகை கொரோனாவின் பாதிப்பு துவங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை எனவே மக்கள் அலட்சியமக இருக்க கூடாது என்று தமிழகத்தின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது "கொரோனாவின் இரண்டாவது அலை முடிந்து விட்டதாக மக்கள் நினைக்கக்கூடாது. அரசு விதித்துள்ள இந்த தளர்வுகளை பயன்படுத்தி மக்கள் அனாவசியமாக வெளியில் சுற்ற கூடாது. மக்கள் வெளியில் வரும் போது அரசு கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இறைச்சி, மீன் மற்றும் காய்கறி மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில், முக கவசம் அணிந்து மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்தாலும், பரிசோதனைகளை குறைக்கவில்லை. கொரோனா நோயாளிகளை கண்டறியும் பணி மிகவும் தீவிரமாக நடக்கிறது. கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு மையத்திற்கு அழைப்புகள் வராத நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து மக்களும் தவறாமல் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும், அது ஒன்றே நமக்கு தீர்வு." என்று அவர் கூறினார்.