'சமூக வலைதளங்களில் அவதூறு செய்தி பரப்புவோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை' : டி.ஜி.பி சைலேந்திரபாபு!
By : Parthasarathy
சில தினங்களுக்கு முன்பு தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு புதிய டி.ஜி.பி ஆக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார். சமீப நாட்களாக, தொடர்ச்சியாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படும் கருத்துகள் மிகவும் கீழ்தரமாகவும், பிறரை இழிவுபடுத்தும் விதமாகவும், ஒருமையில் வசைபாடுவதுமாக, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கின்றது. இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் குறித்தும் மேலும் அதன் மீது காவல்த்துறை மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கை குறித்தும் தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு அலுவலகம் சார்பில் நேற்று செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.
தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துகள் சட்டம்-ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினரிடையே மோதல்களை தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் இருந்தால், அதற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் இத்தகைய சட்ட நடவடிக்கைகள் புதிதல்ல இது காலம், காலமாக காவல் துறையினர் மேற்கொள்ளப்பட்டு வந்தது தான்.
இந்த ஆண்டு கடந்த மே மாதம் முதல் தற்போது வரை சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவு செய்தவர்கள் மீது தமிழகம் முழுவதும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் எல்லை மீறிய வகையில் அவதூறு கருத்துகளை பதிவு செய்த 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எனவே சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துகள் பொது அமைதிக்கும், சட்டம்-ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் உரிய முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் ,காவல்துறை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றது." என்று அதில் தெரிவிக்கப்பட்டது.