ஆட்டோ ஆம்புலன்சை அறிமுகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் : பிரதமர் பாராட்டு!

By : Bharathi Latha
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் அந்த வாரத்தில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு சமூக சேவைகளைச் செய்து வருபவர்களுக்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்து அவர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம், குன்னுார் வண்டிச்சோலையை சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி என்பவர் முயற்சியால், நீலகிரியில் முதல் முறையாக 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்கள் ரூ.21 லட்சம் செலவில் நீலகிரியில் கடந்த 4ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.
இவை பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. இதற்காக 470CC திறன் கொண்ட பஜாஜ் மாக்சிமா வண்டிகள் ஆம்புலன்சாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த ஆம்புலன்சில் நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வசதி, ஸ்ட்ரெச்சர், உதவியாளர் இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர், உள்ளிட்ட முக்கிய வசதிகள் உள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி, வானொலியில் மனதின் குரல் நிகழ்ச்சியில், ராதிகா சாஸ்திரியின் சமூக சேவை குறித்து பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தார்.
இது தொடர்பாக ராதிகா கூறுகையில், "நீலகிரி கிராமங்களில் மிகவும் குறுகலான சாலைகளில் ஆம்புலன்ஸ் சென்று வருவது மிகவும் பயன் அளிக்கிறது. இந்நிலையில் இந்த சேவை குறித்து முதல் முறையாக நீலகிரியை பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் பேசியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதும் பெருமை அளிப்பதாக உள்ளது" என்று அவர் கூறினார்.
