பராமரிப்பின்றி கிடக்கும் திருவாடானை கோயில்! நடவடிக்கை எடுக்குமா அரசு ?
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுவதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
By : Thangavelu
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுவதால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற புனிததலமாகும். அங்கு இருக்கும் இறைவன் ஆதிரெத்தினேஸ்வரர் எனவும், இறைவி சினேகவல்லி எனவும் அழைக்கின்றனர். மேலும், ஆடிப்பூரத்திருவிழா மிகவும் சிறப்புடன் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், மிகவும் பிரபலமடைந்த இந்த கோயிலில் ராஜகோபுரத்தில் பல்வேறு பகுதிகளில் செடிகள் வளர்ந்து சாமி சிலைகள் அனைத்தும் சேதமடைந்து வருகிறது. மேலும், கோயில் முன்பாக உள்ள மண்டப கூரையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை பெய்யும் காலங்களில் தண்ணீர் கோயிலுக்குள் வருகிறது. இந்த கோயிலுக்கு சொந்தமான விளைநிலங்களும் உண்டு. தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்கள் கோயிலில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு ஏராளமான கடைகள் உள்ளது. அதன் மூலம் மாதம் பல லட்சங்கள் வருமானம் கிடைக்கிறது.
இவ்வளவு இருந்தும் கோயில் தற்போது பராமரிப்பின்றி இருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி இந்து அறநிலையத்துறை கவனத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடனடியாக அரசு தலையிட்டு கோயிலை பராமரிக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar