கோயில் வழக்குகளின் உத்தரவுகளை அரசு சரிவர நிறைவேற்றுகிறதா: உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்!
கோயில்களில் திருடுப்போகும் சிலைகள் மற்றும் நகை பாதுகாப்பு உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அரசு சரிவர நிறைவேற்றி உள்ளதா என்பதை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது.
By : Thangavelu
கோயில்களில் திருடுப்போகும் சிலைகள் மற்றும் நகை பாதுகாப்பு உள்ளிட்ட வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அரசு சரிவர நிறைவேற்றி உள்ளதா என்பதை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று கூறியுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில் சிலைகள், நகைகள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் பாதுகாப்பு பெட்டகம் அமைப்பது உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட வழிகாட்டு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்து உள்ளனர்.
மேலும், 38 உத்தரவுகளை அமல்படுத்திவிட்டதாகவும், 5 உத்தரவுகள் மாநில அரசுக்கு தொடர்பில்லாதவை எனவும், 32 உத்தரவுகளை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் கடந்த திங்கட்கிழமை (டிசம்பர் 13) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் மனுதாரர் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, கோயில், அதன் புராதனப் பொருட்களின் பாதுகாப்பு, புனரமைப்பு உள்ளிட்டவைகள் குறித்த வழக்குகளில் அமைக்கப்பட்ட குழுக்களின் ஒப்புதல் இல்லாமல் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அதனையடுத்து அரசு சிறப்பு வக்கீல் சந்திரசேகர், தணிக்கைக்கென தனியாக வழிகாட்டி கையோடு தயாரித்து வருகின்றோம். அதனை வருகின்ற ஜனவரியில் திட்டமிட்டு இருக்கிறோம் எனக் கூறினார். இதற்கு குறுக்கிட்ட நீதிபதிகள், கோயில்களின் சீரமைப்புத் தொடர்பாக அமைக்கப்பட்ட உயர்நீதிமன்ற குழுவே 370க்கும் மேற்பட்ட கோயில்களுக்கு அனுமதியும் வழங்கியுள்ளது.
அது மட்டுமின்றி கோயில்கள் சீரமைக்கப்பட்டுள்ளதா என்ற அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற விவரத்தை இணையதளத்தில் ஏன் வெளியிடக் கூடாது. ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நிறைவேற்றியதாகக் கூறுவதையும், இந்த நீதிமன்றம் கண்காணிக்கும் எனக் கூறினர். இந்த விசாரணைக்கு தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் எனக்கூறி 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Dinamani
Image Courtesy:Nakkheeran