கிருஷ்ணகிரி: மாரியம்மன் கோயில் சொத்துக்கள் விற்பனை: அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் கிடுக்கிப்பிடி கேள்வி!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாரியம்மன் கோயில் சொத்துக்கள் விற்பனை செய்தது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
By : Thangavelu
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாரியம்மன் கோயில் சொத்துக்கள் விற்பனை செய்தது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள மனுவில்: கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி என்ற கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு உரிய நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்தவும், அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும், சொத்துக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமின்றி கோயில் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் தேர்தலையும் நடத்தக்கோரி திருப்பதி கவுண்டர் என்பவரும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்து விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அறநிலையத்துறை சார்பில் அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார். அதன்படி கோயில் நிர்வாக அதிகாரி அறிக்கையை தாக்கல் செய்தார். இது பற்றி நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரணை நடத்தி பிறப்பித்த உத்தரவில் அறிக்கையை பரிசீலனை செய்யும்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கோயிலின் அசையா சொத்துக்களில் மூன்றாம் நபரின் குறுக்கீடும் இருக்கிறது.
மேலும் கடந்த 2001, 2007ம் ஆண்டுகளில் இரண்டு விற்பனை பரிவர்த்தனையும் நடந்துள்ளது. அதன்படி கோயில் சொத்துக்களை சாப்பிட்டுள்ளனர். இதனை மீட்பதற்கு அறநிலையத்துறையும், பரம்பரை அறங்காவலர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரர் ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்த பின்னர், அறிக்கை தாக்கல் செய்வதற்கு உத்தரவிட்ட பின்னரே விவரங்கள் தெரிய வருகிறது. இதில் அதிகாரி கூறிய பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் ஒப்புதல் பெறாமல் எப்படி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது என்பதும் தெரியவில்லை. இது குறித்து அறநிலையத்துறை உண்மையான விசாரணையை தெரியப்படுத்த பொறுப்பான அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும். இந்த வழக்கை மீண்டும் அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Source, Image Courtesy: Dinamalar
https://www.dinamalar.com/news_detail.asp?id=2917215