இளம்பெண்களை இரவு நேரத்தில் தவிக்க விட்ட அரசு பேருந்துகள்: பதற்றத்தில் பெற்றோர்கள்!
By : Thangavelu
கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் விதமாக கடந்த சனிக்கிழமை இரவு 10 மணி முதல் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூர்களுக்கும் செல்பவர்கள் பலர் பரிதவிப்புக்கு உள்ளாகினர். அதே போன்று கோவை அரசு நகரப் பேருந்துகள் அறிவிப்பு இல்லாமல் ரத்து செய்யப்பட்டது பயணிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்த சமயத்தை தங்களுக்கு சாதகமாக ஆட்டோ டிரைவர்கள் பயன்படுத்திக்கொண்டு ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. அதனால் தினமும் வழக்கம் போல இயக்கப்படும் நகரப்பேருந்துகள் அனைத்தும் முன்கூட்டியே பணிமனைக்கு சென்றுவிட்டது. இதனால் இரவு வேலைகளை முடித்து விட்டு நகரங்களில் இருந்து ஏராளமானோர்கள் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டிய நேரத்தில் பேருந்துகள் இல்லாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். பெரும்பாலான பேருந்துகள் இரவு 8 மணி முதலே இயக்கப்படவில்லை. பேருந்து இயக்கப்படாது என்ற முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை.
இதனை நம்பி இளம்பெண்கள் பலர் காந்திபுரம், மற்றும் ரயில்நிலையம், அரசு மருத்துவமனை, டவுன்ஹால், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு திரும்புவதற்காக காத்திருந்தனர். நகரப்பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பதற்றமடைந்த பெண்கள் விசாரித்தபோது பேருந்துகளும் அனைத்தும் பணிமனைக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் கோவையிலிருந்து மேற்கு கிராமங்களுக்கு செல்வதற்கு ஒரு பேருந்து கூட இயக்கப்படவில்லை. கடைகளில் பணிபுரிந்துவிட்டு வீடு திரும்ப இருந்த பெண்கள் பெரும்பாலானோர்கள் நகரப்பேருந்துகளில் செல்பவர்களே. ஆனால் பேருந்து இல்லாமல் ஆட்டோவில் செல்ல முடிவெடுத்தனர். ஆனால் குறைந்த தொலைவிற்கு செல்வதற்கு ரூ.800 வரை கட்டணம் வசூல் செய்துள்ளதாக பெண்கள் கூறியுள்ளனர். பல பெண்கள் 5 பேர் மற்றும் 6 பேர் சேர்ந்து ஒரு ஆட்டோவில் தங்களின் வீடுகளுக்கு சென்றனர். இது போன்ற சமயங்களில் அரசு முன்கூட்டியே பயணிகளுக்கு தெரியபடுத்தினால் அவர்கள் விரைவாக வீடுகளுக்கு செல்வதற்கு ஏதுவாக மாற்று ஏற்பாடுகளை செய்திருப்பர். ஆனால் தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தின் அலட்சியத்தால் பல பெண்கள் இன்னலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இது போன்ற சமயங்களில் வீடு வந்து சேரவில்லை என்ற பயத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் இருந்திருப்பர். இனிமேல் ஆவது அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar