மயிலாப்பூர் கோயிலில் மயில் சிலை மாயம்: அறிக்கை கேட்கும் சென்னை உயர்நீதிமன்றம்!
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை திடீரென்று காணாமல் போனது குறித்த வழக்கில் புலன் விசாரணை மற்றும் துணை ரீதியான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
By : Thangavelu
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை திடீரென்று காணாமல் போனது குறித்த வழக்கில் புலன் விசாரணை மற்றும் துணை ரீதியான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருச்சியை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருக்கின்ற லிங்கத்தை மலர்களால் அர்ச்சிக்கும் வகையில் இருந்த மயில் சிலையானது திருடு போயுள்ளது. அதற்கு பதிலாக தற்போது இருக்கும் மயில் சிலையின் அலகில் பாம்பு ஒன்று இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஆகம விதிகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அறநிலையத்துறை சார்பில் சிறப்பு பிளீடர் ஆஜராகி இன்னும் மயில் மீட்கப்படவில்லை, அது குறித்து புலன் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே நீதிபதிகள் கூறும்போது, சிலையை மீட்பதற்கு முயற்சி மேற்கொள்ளுங்கள். அதே சமயத்தில் ஏற்கனவே இருந்த மயில் சிலையில் இருந்த மலர்கள் போன்று மீண்டும் வைக்க வேண்டும். விசாரணை எப்படி இருக்கிறது, இது போன்ற கால தாமதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், தற்போதைய நிலை குறித்து அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை 24ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
Source, Image Courtesy: Dinamalar