ஆகம விதியை பின்பற்றாமல் விநாயகர் சிலையை அகற்றி கோயிலுக்கு சீல் வைத்த தி.மு.க. அரசு!
By : Thangavelu
விநாயகர் கோவிலில் இருந்து சிலையை அகற்றிவிட்டு சீல் வைத்த சம்பவத்திற்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பாலாஜி நகரில் விநாயகர் கோவில் அமைந்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரகாஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். கோவில் இடைஞ்சலாக இருக்கிறது உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவிலை அகற்றி இடத்தை மீட்க வேண்டும் என தாசில்தாருக்கு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 10ம் தேதி தாசில்தார் அரசகுமார் போலீசாருடன் சென்று அப்புறப்படுத்த முயன்றார். அதற்கு விஷ்வ இந்து பரிஷத் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனை அந்த இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மகேஷ் நேரில் சென்று தடுத்தார். அது மட்டுமின்றி சிலையை கட்டிப்பிடித்துக்கொண்டு எனது உயிர்போன பின்புதான் இங்கிருந்து அப்புறப்படுத்த முடியும் என கோஷங்கள் எழுப்பினார். இதன் பின்னர் போலீசார் மகேஷை வலுக்கட்டாயமாக தூக்கிசென்றனர். அதன்பின்னர் போலீசார் உதவியுடன் சிலையை அகற்றிவிட்டனர். கோவிலுக்கும் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் மகேஷ், சிலையை அகற்ற தாசில்தார் முயன்றபோது போராட்டம் நடத்திய எங்களை போலீசார் வைத்து கைது செய்தனர். இந்த இடத்தில் ஒரு காலத்துக்கு முன்பு சில சமூக விரோத செயல்கள் நடைபெற்றது. அங்கு கோவில் கட்டிய பின்னர் அது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை. திமுக அரசு யாரை திருப்திப்படுத்த கோவிலை அப்புறப்படுத்தினார்கள் என தெரியவில்லை. அது மட்டுமின்றி கோவில் சிலையை அகற்ற வேண்டும் என்றால் ஆகம விதிப்படி பாலாலயம் செய்து அகற்ற வேண்டும். இதில் திமுக அரசு எதுவும் கடைப்பிடிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar