முறைகேடாக மண் கடத்திய லாரி - சாதூர்யமாக மடக்கி பிடித்த பா.ஜ.க'வினருக்கு குவியும் பாராட்டுக்கள்
By : Dhivakar
கோவை: சட்டவிரோதமாக மண் கடத்தலில் ஈடுபட்ட லாரியை பா.ஜ.க'வினர் மடக்கிப்பிடித்து, வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சட்டவிரோதமாக மணல் கடத்தல் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், கோவை மேட்டுப்பாளையம் கைகாட்டி என்ற பகுதியில், லாரி ஒன்று சட்டவிரோதமாக மணல் எடுத்துவந்து, அன்னூர் சாலை வழியாக கடத்தப்படுவதாக பா.ஜ.க'வினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பா.ஜ.க'வினர் லாவகமாக மணல் அள்ளிச் சென்ற லாரியை மடக்கினர். பின்னர் இச்சம்பவம் குறித்து வருவாய் துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம நிர்வாக அலுவலர், லாரியில் இருந்தவர்களிடம் பெறப்பட்ட மண் எடுப்பதற்கான ரசீதை கூர்ந்து ஆய்வு செய்தபோது, சூலூரில் மண் எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ரசீதை முறைகேடாக பயன்படுத்தி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது.இறுதியில் லாரியை பறிமுதல் செய்த வருவாய் துறை அதிகாரிகள், அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சட்டவிரோதமாக மணல் அள்ளி வந்த லாரியை மடக்கிப்பிடித்து, வருவாய் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த பா.ஜ.க'வினரின் செயலை பொது மக்கள் பாராட்டி வருகின்றனர்.