தனியார் மாலில் நடைபெற்ற டி.ஜே நிகழ்ச்சியில், அதிக போதையால் இளைஞர் உயிரிழப்பு!
By : Dhivakar
சென்னை : அண்ணா நகரில் இயங்கிவரும் தனியார் மாலில் நடத்தப்பட்ட டிஜே நிகழ்ச்சியில், பிரவீன் என்ற இளைஞன் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழகத்தில் சமீபகாலமாக இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கங்கள் அதிகமாகி வருகிறது. சிறுவர்கள் முதல் நடுத்தர இளைஞர்கள் வரை அனைத்து தரப்பட்ட இளைஞர்களும் போதை மருந்துகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை தடுக்க தமிழக டி.ஜி.பி சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை அண்ணா நகரில் இயங்கிவரும் தனியார் மாலில், டிஜே இசை நிகழ்ச்சி அரங்கேறியது, அந்நிகழ்ச்சியில் அனுமதியின்றி மது மற்றும் போதைப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, மடிப்பாக்கத்தை சேர்ந்த பிரவீன் என்ற 23 வயது இளைஞன், அளவுக்கு அதிகமாக மது மற்றும் போதைப் பொருட்களையும் உட்கொண்டதால் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தார்.
மயங்கி விழுந்த பிரவீனை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அருகிலிருந்தவர்கள் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் பிரவீனை பரிசோதித்த பின்பு அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விக்னேஷ் மற்றும் மார்க் பரத் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.