கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்த பழனி கோயில் நிர்வாகம்! நடவடிக்கைக்கு தயாராகும் திண்டுக்கல் நகராட்சி!
By : Dhivakar
திண்டுக்கல்: பழனி நகராட்சிக்கு, பழனி தண்டாயுதபாணி கோயில் நிர்வாகம், பல கோடி ரூபாய் வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இதனை சரிசெய்ய அதிரடி நடவடிக்கைகளுக்கு ஆயத்தமாகி வருகிறது திண்டுக்கல் நகராட்சி.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளுள் ஒன்று பழனி தண்டாயுதபாணி திருக்கோயில். உலக பிரசித்தி பெற்ற தலமாக விளங்கும் இக்கோயிலுக்கு, பக்தர்கள் காணிக்கை மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கப்பெறுகிறது. இந்நிலையில் இக்கோயில் நிர்வாகம் மீது தற்போது ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழனி நகராட்சி மன்றத்தில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நகராட்சி சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்பு கூட்டத்தில் வரிவிதிப்பு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. சொத்து வரி உயர்வை கண்டித்து ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் மார்க்சிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் கந்தசாமி பேசினார்.
பின்பு அக்கூட்டத்தில், பழனி கோயில் நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ள சொத்துவரி குறித்து விவாதிக்கப்பட்டது.
"கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் பழனி கோயிலில் 5 கோடி ரூபாய் அளவிற்கு வரி பாக்கி இருந்து வருகிறது. வரி பாக்கி செலுத்தாவிட்டால் கோவிலுக்கு வழங்கப்படும் குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும்" என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து நகராட்சி ஆணையரும் இப்பிரச்சனையை சரி செய்வதாக உத்தரவு அளித்தார்.