மருத்துவ படிப்பை தொடர உதவி கோரும் நாகை மாணவி!
By : Thangavelu
வேதாரண்யம் அருகே அரசுப் பள்ளியில் படித்து மருத்துவ கனவோடு வெளிநாட்டில் படித்த மாணவி ஒருவர் வறுமையின் காரணமாக மீண்டும் மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் அவதியுற்று வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள ஆயக்காரன்புலம் என்ற பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 55, இவரது மனைவி பார்வதி 48. இதில் கிருஷ்ணமூர்த்தி மாற்றுத்திறனாளியாக உள்ளார். இவர்தான் தன்னுடைய குடும்பத்தை கூலி வேலைக்கு சென்று காப்பாற்றி வருகின்றார்.
இந்நிலையில், இந்த தம்பதிக்கு கீர்த்திகா 21 என்ற மகள் உள்ளார். இவர் அரசுப் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண்களை எடுத்தார். இவருக்கு சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்பது லட்சியமாக வைத்து படித்து வந்துள்ளார். மகளுடைய கனவை நனாக்க என்பதால் பார்வதி நிலத்தை விற்று கடந்த 2017ம் ஆண்டு ரஷ்யாவில் மருத்துவ படிப்பிற்கு மகளை சேர்த்துள்ளார். இரண்டு ஆண்டுகள் படித்துவிட்டு விடுமுறைக்காக கீர்த்திகா சொந்த ஊர் திரும்பியுள்ளார். அப்போது குடும்ப சூழ்நிலை காரணமாக மீண்டும் கீர்த்திகா ரஷ்யா செல்ல முடியாமல் தவித்து வந்துள்ளார்.
படிப்பை மீண்டும் தொடருவதற்காக கீர்த்திகா வங்கிகளில் கல்வி கடன் கேட்டுள்ளார். ஆனால் அவருக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. மருத்துவ கனவோடு இருந்த கீர்த்திகா படிப்பை மீண்டும் தொடர முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். தன்னுடைய மருத்துவ கனவு அடியோடு தகர்ந்து விட்டதாக எண்ணி கடந்த மாதம் 30ம் தேதி அரளி விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதனால் மயக்கம் அடைந்த கீர்த்திகாவை பார்த்த உறவினர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அமைச்சர் மெய்யநாதன், தன்னுடைய நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை அளித்துள்ளார். இருந்தாலும் படிப்பை தொடருவதற்கு இன்னும் ரூ.3.50 லட்சம் தேவை என்ற நிலையில் கீர்த்திகா பல இடங்களில் உதவி கேட்டுள்ளார். இதனால் படிப்பை தொடர்வதற்கு அரசு உதவ வேண்டும் என்று அவரது பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar