Kathir News
Begin typing your search above and press return to search.

ஆடி அமாவாசையில் பால் குடம் ஏந்தி யோகேஸ்வர லிங்கத்திற்கு வழிபாடு! ஆதியோகி முன்பு குவிந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள்!

ஆடி அமாவாசையில் பால் குடம் ஏந்தி யோகேஸ்வர லிங்கத்திற்கு வழிபாடு! ஆதியோகி முன்பு குவிந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 July 2022 11:15 AM GMT

ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆதியோகி முன்பு இருக்கும் யோகேஸ்வர லிங்கத்திற்கு இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்கள் பால் குடம் ஏந்தி வந்து பூஜை செய்தனர். இதில் போளுவாம்பட்டி, செம்மேடு, முட்டத்துவயல், கோட்டைக்காடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பாக செம்மேடு பகுதியைச் சேர்ந்த விவசாயி திரு. வேலுமணி அவர்கள் கூறுகையில் "சத்குரு அவர்கள் ஆதியோகி திருவுருவத்தை எங்களுடைய ஊரில் பிரதிஷ்டை செய்து இருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஆதியோகியை தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள யோகேஸ்வர லிங்கத்திற்கு ஒவ்வொரு அமாவாசையும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த மக்கள் பூஜை செய்வதற்கான வாய்ப்பை சத்குரு எங்களுக்கு வழங்கியுள்ளார். அந்த வகையில், ஆடி அமாவாசை தினமான இன்று எங்களுடைய ஊர் மக்கள், சிவ வாத்தியங்களுடன் பால் குடம் ஏந்தி வந்து யோகேஸ்வர லிங்கத்திற்கு பூஜை செய்துள்ளோம். அடுத்தடுத்த ஆண்டுகளில் இதை மென்மேலும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான திரு. கனகராஜ் அவர்கள் கூறுகையில், "இந்த அமாவாசை பூஜைக்கான செலவுகள் அனைத்தையும் எங்களுடைய சொந்த செலவிலேயே செய்துள்ளோம். மக்களுக்கு அன்னதானமும் வழங்குகிறோம். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஊர் திருவிழாவை போல் பங்கேற்றுள்ளோம். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப கரகம் எடுப்பது, பச்சரிசி படையல் வைப்பது என முழு ஈடுப்பாட்டுடன் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த பூஜை எங்களுக்கும் ஈஷாவுக்குமான பிணைப்பை காட்டுகிறது" என்றார்.

பூஜையுடன் சேர்த்து சிலம்பாட்டமும், பெண்களின் கும்மியாட்டமும் நடைபெற்றது. இந்த அமாவாசை பூஜையானது கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News