இருளர் இன மக்களை அலட்சியப்படுத்தும் அதிகாரிகள்! கண்டு கொள்ளுமா தமிழக அரசு?
By : Dhivakar
கிருஷ்ணகிரி: இருளர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில், அரசு சார்பில் அடிப்படை வசதிகள் கூட ஏற்பாடு செய்யாமல் இருப்பது, அம்மக்களை வேதனையடையச் செய்துள்ளது.
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "விடியல் அரசாக தி.மு.க அரசு இருக்கும்" என்று பேசியது தி.மு.க. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பின் தி.மு.க தன் வாக்குறுதியை நிறைவேற்றியதா? என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கல்லாவி அருகே, பனமரத்துப்பட்டி மற்றும் காந்திநகர் பகுதியில், 70க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அடிப்படைத் தேவைகளான கழிப்பிடம் மற்றும் சாலை வசதிகள் இல்லாததால், தங்கள் அன்றாட வாழ்க்கை வேதனைக்குள்ளாகி வருவதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
மேலும் அவர்களுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்காததால், அவர்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதில் சிரமம் இருப்பதாகவும் கூறுகின்றனர். இப்பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அம் மக்கள் புகார் அளித்தும், "அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்" என்றும் இருளர் இன மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
"சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இம் மக்களிடம் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.