பள்ளி கட்டடம் இடிப்பு! கோவிலில் கல்வி கற்கும் மாணவர்கள்!
By : Dhivakar
கடலூர்: ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு கட்டடம் இல்லாததால், அப்பள்ளியின் மாணவர்களுக்கு கோவிலில் பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக, மாநில அரசின் அனைத்து துறைகளும் மக்களிடம் விமர்சனங்களை பெற்று வருகின்றன. இந்நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, 'வரிசாங்குப்பம்' கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கட்டடம் இல்லாததால், அப்பள்ளியின் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள கோவில் வளாகத்தில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எட்டு மாதங்களுக்கு முன் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பள்ளிகல்வித்துறை ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து பழைய பள்ளி கட்டடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் இன்றும் கூட புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. இதனால் பள்ளிக்கு கட்டடம் இல்லாததால் மாணவர்கள் அருகில் உள்ள கோவில் வளாகத்திற்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.
"புதிய பள்ளி கட்டடத்தை விரைந்து கட்ட வேண்டும்" என்று மாணவ-மாணவிகளின் பெற்றோர்களும் ஊர் மக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.