"ராமேஸ்வரத்திலுள்ள சீதா தீர்த்தத்தை சீரமைக்க வேண்டும்" -இந்து முன்னணி கோரிக்கை!
By : Dhivakar
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள புனித சீதா தீர்த்தம், குப்பை கிடங்காக மாறி இருப்பதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவில் புனித யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரத்தை தேர்வு செய்வர். ராமேஸ்வரம் கோயிலிலுள்ள தீர்த்த கிணறுகள் புனிதமானவை. தீர்த்த கிணறுகளில் குளிப்பவர்களின் பாவங்கள் மற்றும் கர்மாக்கள் கழியும் என்பது ஐதீகம். ஆகையால் ராமேஸ்வரத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவது வழக்கம்.
இந்நிலையில் தீர்த்தங்களில் மிக முக்கியமான தீர்த்தமான 'சீதா திருத்தம்', பராமரிப்பின்றி குப்பை கிடங்காக மாறி வருவது, பக்தர்களை வேதனை அடையச் செய்துள்ளது.
இந்நிலையில் தீர்த்தத்தை பராமரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா கூறியதாவது " தமிழகம் மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து புனித தீர்த்தமாட பக்தர்கள் ராமேஸ்வரம் வருகின்றனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தில் சீதா தீர்த்தம் குப்பை கிடங்காக மாறி இருப்பது பக்தர்களை வேதனைப்பட வைக்கிறது. எனவே உடனடியாக தீர்த்தம் சீரமைக்கப்படாவிடில் இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெறும்."
என்று கூறியுள்ளார்.