கோவைக்கு மத்திய அரசால் அதிர்ஷ்டம்! சென்னையை போலவே இன்னொரு ஏர்போர்ட் கிடைக்க வாய்ப்பு?
By : Kathir Webdesk
மத்திய அரசு உதான் திட்டத்தை 2016 முதல் செயல்படுத்தி வருகிறது. , நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விமான சேவையை விரிவு படுத்துவது இதன் நோக்கம். அனைவருக்கும் ஏற்ற வகையில் விமான சேவை வழங்கி, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தப்படும்.
உதான் 1.0 திட்டம், 2016ல் தொடங்கப்பட்டது. தற்போது உதான், 5.1 திட்டம் செயல்பாட்டில் உள்ளது.இந்த திட்டத்தில்,தமிழகத்தில் அரக்கோணம், செட்டிநாடு, சோழவரம்,நெய்வேலி, ராமநாதபுரம், சூலுார், உளுந்துார்பேட்டை, வேலுார் விமான நிலையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விமான சேவை இல்லாத விமான நிலையங்கள் என்ற பட்டியலில் இவை இடம் பெற்றுள்ளன. குறைந்த விமான சேவை கொண்ட விமான நிலையம் என்ற பட்டியலில் சேலம் விமான நிலையமும் இடம் பெற்றுஉள்ளது.
அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள சூலுார் விமான நிலையம், இந்திய விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. விமானப்படை தளமும், போர் விமானங்கள் பழுது நீக்கும் மையமும் இந்த தளத்தில் செயல்படுகிறது.
கடந்த, 1940ல் பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்த விமானப்படை தளம், தென்னிந்தியாவில் அமைந்துள்ள விமானப்படை தளங்களில் முதன்மையானது. தேஜஸ் போர் விமானங்கள், சாரங், துருவ் ஹெலிகாப்டர்கள் இந்த தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி, பிரதமர் போன்ற வி.வி.ஐ.பிக்கள் தனி விமானத்தில் வந்து செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து ஐந்தாம் முறையாக மத்திய அரசு சூலுார் விமான நிலையத்தை உதான் பட்டியலில் அறிவித்துள்ளது.
சூலுார் விமான நிலையத்துக்கு விமானம் இயக்க, ஏதேனும் விமான நிறுவனங்கள் முன் வரும் பட்சத்தில் கோவையின் இரண்டாம் விமான நிலையமாக சூலுார் செயல்பட வாய்ப்புள்ளது.
Input From: Dinamalar