மதுரையில் போலீஸ் விசாரணைக்கு சென்று வந்தவர் மர்ம மரணம் - போராட்டத்தில் குடும்பத்தினர்!
By : Kathir Webdesk
காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 30 வயது கட்டிடத் தொழிலாளி போலீஸ் சித்திரவதையால் உயிரிழந்ததாகக் கூறி மதுரை எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அப்பகுதி மக்கள் இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
இறந்தவர் பெயர் வேடன். சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான அவர் சனிக்கிழமை இரவு சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியபோது எம்.கல்லுப்பட்டி போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் அவர் காவல்துறையினரால் விடுவிக்கப்பட்டார். ஆனால் வீட்டிற்கு வந்து மனஉளைச்சலில் இருந்தார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். திடீரென உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட அவர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
போலீஸ் காவலில் சித்ரவதையால் வேடன் உயிரிழந்ததாகவும், காவலில் வைத்து சித்திரவதைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் எம்.கல்லுப்பட்டி காவல் நிலையம் முன்பு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும், வேடனுக்கு சித்திரவதை ஏதும் அளிக்கப்படவில்லை என்றும், இதயக் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்தார் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், வேடன் சித்திரவதை செய்யப்படவில்லை என்று கூறினார். சிசிடிவி காட்சிகளில் கட்டிடத் தொழிலாளி மீது போலீஸ் சித்திரவதை எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.
உள்ளூர் சமூக சேவகர் மணிசுவாமி, ஊடகவியலாளர்களிடம் பேசுகையில், வேடன் காவல் நிலையத்தில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவர் ஆரோக்கியமான நபர் என்றும், காவலில் வைக்கப்பட்ட சித்திரவதையால் தான் அவர் இறந்ததாகவும் கூறினார். வேடன் காவலில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு இறந்ததற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Input From: HinduPost