இனி இந்துக்களை ஏமாற்ற முடியாது என உணர்ந்த சன் நெட்வொர்க் - "தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என வரலாற்றில் முதன் முறையாக விளம்பரம்"!
By : Mohan Raj
வழக்கமாக அரசியல் கட்சிகள் துவங்கப்பட்ட கருத்தியலை, காலங்கள் சென்றாலும் கடைபிடித்தே ஆக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அல்லது தங்கள் கொள்ளைகள் அற்று போய்விட்டன இனி தங்கள் கட்சி கருத்தியல் மக்களிடம் எடுபடாது என்று ஒப்புக்கொண்டாவது ஒதுங்கி விட வேண்டும்.
ஆனால் காலத்தினால் ஏற்பட்ட மாற்றம் தங்கள் கட்சியை தோற்றுவித்த காரணத்தையும், தங்கள் கட்சியை தோற்றுவித்து வளர்ந்த தலைவர்களின் கருத்தியலையும் மாற்றுகிறது என தெரிந்தும் அதனை ஒப்புக்கொள்ளாமல் இன்னமும் ஜம்பமாக பேசி தமிழகத்தில் வாழ்கிறது என்றால் அது தி.மு.க மட்டுமே.
திராவிடர் கழகம் அந்தணர் எதிர்ப்பையும், இந்துமத துவேஷத்தையும் கையில் எடுத்தே தங்கள் பிழைப்பை ஓட்டியது, தேர்தல் எனும் பாதையில் இறங்காத காரணத்தால் அந்த இயக்கம் தங்களின் இஷ்டப்படி இந்துக்களை இழிவாக பேசி வந்தது. அதன் அடுத்த பிறவியான தி.மு.க'வோ அதனை அப்படியே பின்பற்றியது விலக்காக தேர்தல் சமயத்தில் மட்டும் இழிவாக பேசுவதை குறைத்து கொள்வார்களே தவிர நிறுத்தியதாக சரித்திரம் இல்லை.
இந்த இரு இயக்கங்களின் ஒரே குறிக்கோள் "தமிழர்கள் வேறு, இந்துக்கள் வேறு" என்ற பரப்புரையை மக்கள் மனதில் பதிய வைத்து அதன் மூலம் பிரிவினையை ஏற்படுத்தி அதில் தங்களது அரசியல் இயக்கங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை தவிர வேறு காரணங்கள் இல்லை.
இதில் முக்கியமான அம்சம்தான் சித்திரை 1'ம் தேதியை 'தமிழ் புத்தாண்டு' என கொண்டாடும் இந்து மத வழக்கத்தை உடைத்து அதனை 'தை திருநாளே தமிழ் புத்தாண்டு' என இஷ்டத்துக்கு மாற்றி அதிலும் ஓர் அரசியல் செய்து விளையாடியது இதற்கு தி.மு.க'வின் மறைந்த தலைவர் கருணாநிதி வடிவமைப்பு செய்து அதனை தன் ஆட்சிகாலத்தில் மாற்றினார்.
1971ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் , 1972ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசிதழிலும் நடைமுறைப்படுத்திட ஆணை பிறப்பித்தார் தி.மு.க தலைவர் கருணாநிதி, மேலும் திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என குறிப்பிடும்படி அரசாணையும் வெளியிட்டார்.
இதனை தொடர்ந்து அரசு குறிப்புகளில் தமிழ் தேதியை குறிப்பிடும் இடங்களில் "திருவள்ளுவராண்டு" என குறிப்பிடவும் செய்தார். இதனை இன்றளவும் அவரது ஆட்சிகாலத்தில் குடமுழுக்கு செய்யப்பட கோவில் கல்வெட்டுகளில் காணலாம். இப்படி தி.மு.க தன் ஆட்சிகாலத்தில் இஷ்டத்தில் இந்துக்கள் சடங்குகளில் புகுந்து விளையாடியது.
இதனை தி.மு.க ஆட்சியில் இல்லாத பொழுதும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்துகொண்டே இருந்தது. அதில் குறிப்பிடும்படியாக 2014'ம் ஆண்டு சென்னையில் தமிழர் திருவிழா என்ற தலைப்பில் தி.மு.க தலைவர் கருணாநிதி ஆற்றிய உரையில், "தமிழனுக்கு தமிழ் புத்தாண்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது தி.மு.க'தான், தமிழன் கதைகளை கேட்டு இருளில் மூழ்கி கிடந்தான். இப்படி மறந்து கிடந்த தமிழனை தட்டி எழுப்பியது நாங்கள் செய்த சாதனை" என பெருமை பொங்க பேசினார். அப்பொழுது அருகில் கிருஸ்துவ பேராயர் எஸ்ரா சற்குணம் அமர்ந்திருந்தது குறிப்பிடதக்கது.
மேலும் பேசிய அவர், "ஆங்கிலேயன் முதல் அனைவரும் ஆண்டுகளை எண்களில் குறிப்பிடும் பொழுது நாம் மட்டும் ஆண்டுகளை 60 ஆண்டுகள் என பிரித்து பிரபவ, விபவ, சுக்ல, பிரமோதூத, பிரசோற்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ என பெயரிட்டு அதனை இரு கடவுளுக்கு பிறந்த 60 குழந்தைகள் எனவும் கதைகளை அமைத்து, அந்த 60 குழந்தைகள்தான் 60 தமிழ் ஆண்டுகள் என நம்மை ஏமாற்றியிருக்கிறார்கள்" என கிண்டல் ததும்ப பேசினார் தி.மு.க தலைவர் கருணாநிதி. இப்படி தமிழ் புத்தாண்டை கேவலமாக இழிவாக பேசி வந்த இயக்கம் தி.மு.க.
அப்படி இருக்கையில் தி.மு.க வின் தற்கால ஆணிவேர்களில் ஒன்றான சன் தொலைக்காட்சி குழுமங்கள் நல்லநாள் பார்த்து தமிழ் புத்தாண்டு அன்று துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் அதனை ஒப்புக்கொள்ளாமாட்டார்கள். ஆனால் தமிழ்புத்தாண்டு அன்று மட்டும் வருமானம் போய்விடுமே என 'தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்" என ஒளிபரப்பாமல் "சன் குழுமம் துவங்கப்பட்ட ஆண்டு" என மாற்றி கூறி சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருமானம் ஈட்டி வந்தனர் இதுதான் கடந்த 28 ஆண்டுகால சன் தொலைக்காட்சியின் தமிழ் புத்தாண்டு வரலாறு.
ஆனால் தற்பொழுது தமிழகத்தில் இந்துக்கள் வாக்கு வங்கி உருவான காரணத்தால் இனி இந்துக்களை ஏமாற்ற இயலாது என தெளிவாக தெரிந்துகொண்டு வரலாற்றில் முதன் முறையாக "தமிழ் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்" என பெயரிட்டு தங்களின் விளம்பரங்களை தற்பொழுது சன் தொலைக்காட்சி குழுமம் வெளியிட்டுள்ளது.
இதுவரை இந்துக்களை ஏமாற்றிய நாம் இனி ஏமாற்ற முடியாது என சன் குழுமம் உணர்ந்துள்ளதே இந்துக்கள் வாக்கு வங்கிக்கு ஏற்பட்ட முதல் வெற்றி.