தூத்துக்குடி: 100க்கும் மேற்பட்ட பனை மரங்களை வேரோடு சாய்த்து நடைபெறும் செம்மண் மணல் கொள்ளை! கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்!
By : Dhivakar
தூத்துக்குடி : பல ஏக்கர் பரப்பளவிலுள்ள பனை மரங்களை வேரோடு வெட்டி, மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் பல அடிக்கு செம்மண் மணல் கொள்ளை ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த எட்டு மாத காலமாக கொலை கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால் மக்கள் தமிழகத்தில் பீதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் வரிசையில், பரமன்குறிச்சியையடுத்த திருச்செந்தூர் நாகர்கோயில் பிரதான சாலை பகுதியில், கடந்த சில நாட்களாக செம்மண் கொள்ளை நடைபெறுகிறது.
தனியாருக்கு சொந்தமான இடத்தில், அரசின் விதிமுறைகளை மீறி, 30 அடிக்கு மேல் பள்ளங்கள் தோண்டி, செம்மண் கொள்ளை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
ஒரு நாளுக்கு 100க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் மணல் கொள்ளை நடைபெறுவதால், அப்பகுதி மக்கள் "நிலத்தடி நீர் பாதிக்கப்படுமோ!" என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
"அதிகாரிகளிடம் இது பற்றி கூறி எந்த பலனுமில்லை, கிட்டத்தட்ட 150 பனை மரங்கள் வேரோடு சாய்க்கப் பட்டுள்ளன, மேலும் அதிக அளவில் செம்மண் கொள்ளை நடைபெறுவதால் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகிறது." என்று அப்பகுதி இளைஞர் ஒருவர் வேதனையுடன் கூறுகிறார்.
"அரசின் விதிமுறைகளை மீறி நடைபெறும் இந்த செம்மண் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.