ஸ்டாலின் தொடங்கி வைத்து 14 வருடங்களாகியும் திறக்கப்படாத பேருந்து நிலையம் - விடியலுக்காக காத்திருக்கும் மக்கள்!

By : Muruganandham
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நகராட்சி சார்பில் தேசிய நெடுஞ்சாலையில் 3.97 ஏக்கர் பரப்பளவில் ₹1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பஸ் நிலையம் அமைக்கப்பட்டது.
கோவில்பட்டி நகரில் மத்தியில் அண்ணா பஸ் நிலையம் செயல்பட்டு வந்தாலும், இந்த கூடுதல் பஸ் நிலையம் கடந்த 2007-ஆம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் திறந்து வைத்தார். கூடுதல் பஸ் நிலையத்தில் பஸ் இயக்கப்பட்ட சில மாதங்களில் நிறுத்தப்பட்டது.
தற்போது வழக்கம் போல அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து தான் பேருந்துகள் செயல்பட்டு வருகிறது. கூடுதல் பேருந்து நிலையம் வழக்குகள் காரணமாக செயல்படாமல் இருந்தது.
14 ஆண்டுகளாக பயன்பாடு இன்றி இருந்து, தற்பொழுது திறந்த வெளி மதுபானக்கூடமாக மாறியுள்ளது. கூடுதல் பேருந்து நிலையம் முழுவதும் எந்த பகுதிக்கு சென்றாலும் மதுபான பாட்டில்களை எளிதில் பார்க்க முடியும்.
மேலும் பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே சுவர்களும், மேற்கூரைகளும் பெயர்ந்து விழுந்து கொண்டு இருக்கிறது. மேற்கூரைகளில் மரங்கள் வளரும் அளவுக்கு பராமரிப்பு உள்ளது.
இந்த தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிலையம் இருந்தாலும், அந்த வழியாக செல்லக்கூடிய அரசு, தனியார் பேருந்துகள் எதுவும் கூடுதல் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை, பேருந்து நிலையத்திற்கு வெளியே இறக்கி விட்டு செல்கின்றனர்.
14 ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட கூடுதல் பஸ் நிலையம் மீண்டும் செயல்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா என்று எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர் பொது மக்கள்.
