தாம்பரத்தில் 15 ஏக்கர் கோயில் நிலம் ஏப்பம்: கண்டு கொள்ளாத இந்து சமய அறநிலையத்துறை!
சென்னை, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 14.68 ஏக்கர் நிலம் கணக்கில் வராமல் மாயமாகியுள்ளது. இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
By : Thangavelu
சென்னை, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 14.68 ஏக்கர் நிலம் கணக்கில் வராமல் மாயமாகியுள்ளது. இது பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
தாம்பரம் மாடம்பாக்கத்தில் சுமார் ஆயிரம் வருடங்கள் மிகவும் பழமையான தேனுபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு பல ஏக்கர் நிலங்கள் தானமாகவும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அறநிலையத்துறை அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் அரசியல் பிரபலங்களில் தலையீட்டால் பல ஏக்கர் நிலங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் அரசு நிலங்கள் கோயில் நிலங்களாக மாற்றப்பட்டிருப்பதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் எஸ்.ஜெயபால் 59, இவர் ஒரு சமூக ஆர்வலர் ஆவார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அனுப்பிய பதிலில் கூறியிருப்பதாவது: கடந்த 1960ம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட வந்த கோயில் நிலங்களின் விபரங்கள் எதுவும் இல்லாமல் உள்ளது. மேலும், 2019ம் ஆண்டு அடிப்படையில் கோயிலுக்கு சொந்தமான புஞ்சை 48.97, நஞ்சை 38.60 என்று மொத்தம் 87.58 ஏக்கர் நிலம் உள்ளது. இதற்கு கடந்த 2001ம் ஆண்டு கணினி மூலம் பட்டா வாங்கப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை பதில் கூறியுள்ளது.
மேலும், இந்த நிலங்களை யார், யார் தானமாக கொடுத்தார்கள் என 2வது முறையாக எழுப்பி கேள்விக்கு, சம்பந்தப்பட்ட ஆவணங்கள் எதுவும் கோயிலில இல்லை. ஆனால் வருவாய்த்துறை ஆவணங்கள் மூலமாக நிலங்கள் பராமரிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயம் வருவாய்த்துறையிடம் விசாரித்தபோது 87.58 ஏக்கர் நிலங்கள் வெவ்வேறு நிலை அரசு புறம்போக்கு நிலங்களாக இருந்து கோயிலுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில், 72.90 ஏக்கர் நிலங்களுக்கு மட்டுமே கணினி மூலம் பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதம் 14.68 ஏக்கர் நிலம் பட்டா வழங்கவில்லை.
எனவே மொத்தம் உள்ள 87.58 ஏக்கரில் தற்போது 72.90 ஏக்கர் நிலம் மட்டும் கோயில் கண்காணிப்பில் உள்ளது. மீதம் 14.68 ஏக்கர் நிலம் கணக்கில் வராமல் இருக்கிறது என தெரியவந்துள்ளது. அது பற்றிய ஆவணங்கள் தகவல் இல்லை. தற்போது 14.68 ஏக்கர் நிலம் மாயமாகியுள்ளது. இது மிகப்பெரிய முறைகேடு ஆகும். இதற்கு முதலமைச்சர் தனிப்பிரிவு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உட்பட பல அதிகாரிகளுக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Source, Image Courtesy: Dinamalar