பெரியகுளத்தில் ரூ.150 கோடி அரசு நிலத்தை மீட்டுக்கொடுத்த உதவி ஆட்சியர் மாற்றம்: நேர்மையான அதிகாரிக்கு இது பரிசா?
By : Thangavelu
தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட அரசியல் பிரமுகர்கள், தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட சுமார் ரூ.150 கோடி மதிப்பிலான 216 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை பெரியகுளம் உதவி ஆட்சியர் ரிஷப் என்பவர் மீட்டுக்கொடுத்த நிலையில், அவர் தற்போது மாற்றப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரியகுளம் உதவி ஆட்சியராக ரிஷப் கடந்த 2021ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி பொறுப்பேற்றார். பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களின் டிஜிட்டல் அ பதிவேடுகளை அதிகாரிகள் திருத்தி அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனிநபர்களுக்க பட்டா பதிவு செய்து கொடுத்திருக்கும் மோசடியை அறிந்துள்ளார்.
இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் தனக்கு பல்வேறு மிரட்டல்களை விடுத்திருந்தும் தைரியமாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். அது மட்டுமின்றி நில அபகரித்தவர்கள் மீது குற்றப்பிரிவில் புகார் கொடுத்திருந்தார். இதன் பின்னர் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு சர்வேயர் மற்றும் உதவியாளர், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்த துணைத்தாசில்தார்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், ரூ.150 கோடி சந்தை மதிப்புமிக்க ஆக்கிரமிக்கப்பட்ட 216 ஏக்கரை மீண்டும் அரசு நிலங்களாக பட்டா பதிவு செய்திருந்தார். இவரது சேவைக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதில் ரிஷப்பை தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனிடையே அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டுக்கொடுத்த உதவி ஆட்சியர் மாற்றப்பட்டுள்ளார். அரசு நிலத்தை மீட்டுக்கொடுத்த நல்ல அதிகாரியை இப்படி மாற்றியிருப்பது அரசியல் காரணங்கள் இருக்கலாம் என பொதுமக்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Source, Image Courtesy: Dinamalar