பறிபோகும் கோவில் சொத்துகள் - வடபழனி முருகன் கோவிலின் 1,600 சதுரஅடி நிலம் மசூதி பாதைக்கா?

By : Muruganandham
வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான 1,600 சதுரஅடி நிலம் மசூதிக்கு செல்லும் பாதைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, இந்து முன்னணியின் சென்னை மாநகரத் தலைவர் ஏ.டி.இளங்கோவன் பேசுகையில்,
மஜீத் நகரில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, நிலத்துக்கு அருகில் உள்ள மசூதிக்குச் செல்வதற்கான பாதைக்காக குறிப்பிட்ட இடத்தை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அப்பகுதி முஸ்லிம்கள் முறையிட்டனர். அவ்வாறு வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று சம்பந்தப்பட்ட அதிகாரி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, மசூதியின் ஒலிபெருக்கி மூலம் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களை அழைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், 20 அடி அகலம் 80 அடி நீளம் என சுமார் 1,600 சதுரஅடி கோயில் இடம் மசூதிக்கு செல்வதற்கான பாதைக்கு வழங்கப்பட்டுள்ளது.
மசூதிக்கு வழங்கிய கோயில் இடத்தை அதிகாரிகள் உடனடியாக மீட்க வேண்டும். மேலும், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டமாக போராட்டம் நடத்துவதா அல்லது சட்டப் போராட்டத்தை முன்னெடுப்பதா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என்று அவர் கூறினார்.
சம்பவத்தின் பின்னணி:
சென்னை சாலிகிராமம் மஜீத் நகரில் வடபழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமாக ஒரு ஏக்கர் 85 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலம் தனியார் சிலரால் வாகனங்கள் நிறுத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மூலம் அண்மையில் இந்த நிலம் மீட்கப்பட்டது. மீண்டும் ஆக்கிரமிப்புகள் நடக்காமல் தடுக்க, நிலத்தைச் சுற்றி இரும்பு தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்த பணியின் போதே ஆக்கிரமிப்பு நடந்துள்ளது.
