பார்க்கிங் வசதியே இல்லாத மருதமலை கோயில் அடிவாரத்திற்கு 200 ரூபாய் பார்க்கிங் கட்டணம் வசூல்!
By : Dhivakar
கோவை : மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில், பார்க் செய்யப்படும் பக்தர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டனம் வசூல் செய்யப்படும் நிகழ்வு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கோவை மருதமலை முருகன் கோயில், புகழ்பெற்ற முருகன் ஸ்தலங்களில் ஒன்று. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் மலை அடிவாரத்தில், மெயின் ரோட்டிற்கு ஓரமாக தங்களின் வாகனங்களை பார்க் செய்கின்றனர். பார்க் செய்யும் வாகனங்களுக்கு அதிகமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிட்டத்தட்ட வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு, இரு நூறு ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.
இந்த அதிகப்படியான கட்டண வசூல் குறித்து, சோமையம்பாளையம் ஊராட்சித்தலைவர் ரங்கராஜ் விளக்கம் அளித்துள்ளார் " ஆம் அது உண்மைதான், இது குறித்து கட்டணம் வசூல் செய்பவரிடம் விசாரிக்கிறேன் ( மருதமலை அடிவாரம் வண்டிப்பேட்டை பகுதி 18 லட்சத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு ஏலத்தில் விலை போனது). நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க முயற்சி செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இறைவனை தரிசிக்க கோவிலுக்கு வரும் பக்தர்களிடம், கொள்ளை காசு வசூல் செய்யும் இந்த முறைக்கு, பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.