அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் ₹25 லட்சம் வழங்க வேண்டும் : முதல்வருக்கு மா.வெங்கடேசன் கோரிக்கை..!

By : Parthasarathy
இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்காக அயராது உழைப்பவர்கள் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள்,செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அவசர மருத்துவ ஊர்தி பணியாளர்கள். இவர்களின் இந்த சேவையை பாராட்டும் விதமாக அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை மற்றும் அதை சார்ந்த பணிகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கியது.
அது மட்டுமின்றி கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் ரூபாயும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பத்திக்கையாளரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த செயலை பாராட்டி திரு. ஸ்டாலினுக்கு, தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையத்தலைவர் திரு. வெங்கடேசன் கடிதம் எழுதினார். அதில் அவர் " தாங்கள் கொரோனா நோயால் இறந்த மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் குடும்பத்திற்கு கொரோனா இழப்பீடு தொகை வழங்குவதாக அறிவித்தது பாராட்டுதலுக்குரியது. ஆனால் அதேபோல் மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி, ஊராட்சி போன்ற இடங்களிலும் தூய்மை பணியாளர்கள் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா பாதித்த பகுதிகளை தூய்மை செய்வது, மருத்துவ கழிவுகளை அகற்றுவது, தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உதவுவது போன்றவற்றால் நோய் தொற்றில் பலர் இறக்கின்றனர். ஆகையால் இவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதே சமயம் கொரோனா எதிர்ப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் இழப்பீடு தொகை தலா 25 லட்சம் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
