கூவம் ஆற்றில் தினந்தோறும் கலக்கும் 3.6 கோடி லிட்டர் சாக்கடை நீர்: அதிகாரிகளின் அலட்சியம்!
By : Thangavelu
சென்னை, ஆவடியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தினந்தோறும் வெளியேறும் 3.6 கோடி லிட்டர் தண்ணீர் கறுப்பு நிறத்தில் கூவம் ஆற்றில் கலந்து வருவதால் மேலும் மாசடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆவடி மாநகராட்சியின் எல்லை முடிகின்ற வரையில் கூவம் ஆறு மிகவும் தெளிந்த நிலையில் வருகிறது. ஆவடியை கடந்த பின்னர் சாக்கடை போன்று கறுப்பு நிறமாக மாறி மாசடைந்து சென்னை மாநகரில் சென்ற வண்ணம் உள்ளது. கூவம் ஆற்றை தூய்மைப்படுத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுவரை அத்திட்டம் செயல்பாட்டு வரவே இல்லை என்று மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் மெத்தன போக்கு காரணமாக கூவம் ஆறு மேலும் மாசடைந்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆவடியில் 36 எம்.எல்.டி., சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு இருந்து சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் கூவம் ஆற்றில் மிகப்பெரிய குழாய் வழியாக கலக்கிறது. இந்த நீரை சில தொழிற்சாலைகளுக்கும் விற்பனை செய்யப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் கழிவுநீரின் தன்மை குறையாமல் இருக்கிறது. இதனை பயன்படுத்த முடியாத நிலையால் ஆற்றில் அப்படியே கலக்கப்படுகிறது.
ஆவடி மாநகராட்சியின் அதிகாரிகள் மெத்தனப்போக்கால் மொத்த கழிவுநீரும் கூவம் ஆற்றில் கலக்கப்படுகிறது. தினமும் 3 கோடியே 60 லட்சம் லிட்டர் சாக்கடை கழிவுநர் கருமை நிறத்தில் கூவத்தில் கலக்கிறது. இதனை அதிகாரிகள் கண்காணித்து கட்டுப்படுத்தாவிட்டால் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar