விழுப்புரத்தில் 5 வயது சிறுவன் பட்டினியால் இறந்த கொடுமை: தள்ளுவண்டியில் சடலம் கண்டெடுப்பு!
கடந்த 15ம் தேதி காலை சலவை தொழிலாளர் வந்து பார்த்தபோது, தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அருகாமையில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்துள்ளனர்.
By : Thangavelu
விழுப்புரம், தேசிய நெடுஞ்சாலையில் தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அச்சிறுவன் உணவின்றி பட்டினியால் இறந்து போனது பிரேத பரிசோதனையில் கண்டுப்பிடிக்கப்பட்டிருப்பது அனைவரையும் கண்கலங்க செய்துள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை செல்கின்ற தேசிய நெடுஞ்சாலையில் மேல்தெரு என்கின்ற இடத்தில் சிவகுரு என்பவர் தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகின்றார். கடந்த 15ம் தேதி காலை சலவை தொழிலாளர் வந்து பார்த்தபோது, தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அருகாமையில் இருப்பவர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து பொதுமக்கள் சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்துள்ளனர். அப்போது சிறுவன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் கிடைத்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தபோது, ஆண் குழந்தை இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் யாரும் தங்கள் குழந்தை இல்லை என்று கூறியுள்ளனர். குழந்தையின் உடலில் எவ்வித காயமும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இறந்து போன குழந்தை உணவு சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இறந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யாருடைய குழந்தை என போட்டோவை காண்பித்து அருகாமையிலும் மற்ற காவல் நிலைய எல்லையிலும் விசாரணை செய்து வருகின்றனர். சாப்பாடு இன்றி ஒரு குழந்தை உயிரிழந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.