கைவிடப்பட்டதா முன்னாள் முதல்வரின் நிவாரண அறிவிப்பு? உயிரிழந்த மருத்துவர்களுக்கான நிவாரணம் 50 லட்சத்திலிருந்து 25 லட்சமாக குறைப்பு!
By : Muruganandham
கொரோனா சிகிச்சை பணியில் உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவி தொகை வழங்கப்படும். கொரோனா நோய்த்தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று நோய் போராட்டத்தில் முன் நின்று பணிபுரியும் அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்த பணியாளர்கள், காவல்துறை மற்றும் பிற அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், எவருக்கேனும் இந்நோய் ஏற்பட்டால் சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும்.
கரோனா நோய்த் தடுப்புப் பணியில் அரும்பணியாற்றி வரும் மருத்துவத் துறை சார்ந்த பணியாளர்கள் எவரேனும் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு 50 லட்சம் ரூபாய், காப்பீட்டுத் திட்டம் மூலம் வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அதே போல மருத்துவத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை பணியாளர்களும் கரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டு நோய்த் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
தற்போது உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் 50 லட்சத்திலிருந்து 25 லட்சமாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.