Kathir News
Begin typing your search above and press return to search.

மிளகு சாகுபடி மூலம் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை லாபம் ஈட்டலாம், ஈஷா நடத்திய பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் தகவல்!

மிளகு சாகுபடி மூலம் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை லாபம் ஈட்டலாம், ஈஷா நடத்திய பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் தகவல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Feb 2022 12:58 PM GMT

"சமவெளியில் மிளகு சாகுபடி செய்வதன் மூலம் ஆண்டுதோறும் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை கூடுதல் லாபம் ஈட்ட முடியும்" என முன்னோடி விவசாயிகள் தெரிவித்தனர்.

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 'சமவெளியில் மிளகு சாகுபடி சாத்தியமே' என்ற தலைப்பிலான கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சி பொள்ளாச்சியில் இன்று (பிப்ரவரி 20) நடைபெற்றது. வேட்டைக்காரன் புதூரில் உள்ள முன்னோடி மரப்பயிர் விவசாயி திரு.வள்ளுவன் அவர்களின் பண்ணையில் நடந்த இப்பயிற்சியில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 600 விவசாயிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் திரு. வள்ளுவன் அவர்கள் பேசுகையில், "நான் ஈஷாவின் வழிக்காட்டுதலுடன் கடந்த 12 வருடமாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். தென்னையை பிரதான பயிராக செய்கிறேன். அதற்கு இடையில் மரங்களையும், மற்ற பயிர்களையும் சேர்த்து பல பயிர் சாகுபடி முறையில் விவசாயம் செய்து வருகிறேன். இதில் குறிப்பிட்டு சொல்லும்படியாக, தென்னையிலும், மரங்களிலும் மிளகு கொடியை ஏற்றி உள்ளேன்.

பொதுவாக சமவெளியில் மிளகு விளையாது. அது மலைப்பயிர் என சொல்வார்கள். ஆனால், இங்கு சமவெளியிலேயே நன்கு வளர்கிறது. நட்டதில் இருந்து 3 வருடங்களுக்கு பிறகு ஒவ்வொரு மரத்தில் இருந்தும் சராசரியாக 2 கிலோ வரை மிளகு அறுவடை ஆகிறது. ஒரு கிலோ மிளகை ரூ.800-க்கு விற்பனை செய்கிறேன். தென்னையை மட்டும் நம்பி இருக்காமல் இப்படி பல பயிர் சாகுபடி செய்வதன் மூலம் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறியுள்ளது" என்றார்.

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ் மாறன் கூறுகையில், "புதுக்கோட்டை, கடலூர் போன்ற மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக சமவெளியில் மிளகு சாகுபடியை வெற்றிகரமாக செய்து வருகின்றனர். இதை நாங்கள் நேரடியாக களத்திற்கே சென்று பார்த்தோம். தேக்கு, மகோகனி, தென்னை போன்ற மரங்களில் மிளகு கொடியை ஏற்றி வளர்த்து வருகின்றனர். 4-வது அல்லது 5-வது ஆண்டில் இருந்து மிளகு காய்ப்புக்கு வருகிறது. அவர்கள் ஆண்டுக்கு ஏக்கருக்கு 100 கிலோவில் இருந்து 1000 கிலோ வரை மகசூல் எடுக்கின்றனர். ஒரு கிலோ ரூ.500-க்கு விற்றாலும் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சம் வரை கூடுதல் லாபம் ஈட்ட முடியும். இதுதவிர்த்து, தென்னை மற்றும் மற்ற ஊடுப் பயிர்களில் இருந்தும் தனி வருமானம் கிடைக்கும்.

ஆகவே, சமவெளியிலும் மிளகு சாகுபடி சாத்தியம் என்பதை உணர்ந்தோம். இதையடுத்து, கடந்த 5 ஆண்டுகளாக இந்த மிளகு சாகுபடி களப் பயிற்சியை நடத்தி வருகிறோம். எனவே, அனைத்து மாவட்ட விவசாயிகளையும் பரீட்சார்த்த முறையில் மிளகு சாகுபடி செய்ய அறிவுறுத்துகிறோம். அவர்கள் நிலத்தில் மிளகு செடி நன்கு வளர தொடங்கினால் அதை விரிவுப்படுத்த சொல்கிறோம். இதன்மூலம், விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களில் இருந்து 5, 10 ஆண்டுகளுக்கு பிறகு வருமானம் ஈட்டுவதற்கு முன்பாகவே, கூடுதல் வருட வருமானம் பார்ப்பதற்கு இந்த மிளகு சாகுபடி விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்" என்றார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் லாபகரமாக மிளகு சாகுபடி செய்து வரும் முன்னோடி விவசாயிகள் திரு.ராஜாகண்ணு, திரு. பாலுசாமி, திரு. செந்தமிழ் செல்வன், திரு.பாக்கியராஜ் மற்றும் கடலூர் விவசாயி திரு. திருமலை ஆகியோர் மிளகு சாகுபடி செய்வதற்கான தொழில்நுட்பங்களையும், வழிமுறைகளையும் விரிவாக எடுத்துரைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News