ஆக்சிஜன் உற்பத்தி : மேலும் 6 மாதம் அவகாசம் கேட்டு வேதாந்தா மனுதாக்கல்!

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவிய நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டது. இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்த சூழலில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் தயாரித்து வழங்க அனுமதி கோரியிருந்தது. இதற்கு உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் நிறுவனம் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக அரசு ஸ்டெர்லைட் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. இதனை அடுத்து தமிழக அரசு கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்யும் வகையிலும், மேலும் அங்கு பிற செயல்கள் நடக்காதவாறும் கண்காணிப்பு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஸ்டெர்லைட் நிறுவனம் தனது ஆக்ஸிஜன் உற்பத்தியை தொடங்கி தமிழகம் முழுவதும் வழங்கியது.
கொரோனா காலத்தில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தென்மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜன் தடையின்றி கிடைத்ததால் பல மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையில் மூன்று மாத காலத்திற்கு ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நடப்பு மாதத்துடன் அதற்கான அனுமதி முடிவடைய உள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மேலும் 6 மாத காலம் அவகாசம் கேட்டு வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.