கல்குவாரி விபத்து: 6வது நபரை மீட்கும் பணி நிறுத்தம்!
By : Thangavelu
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியிருக்கும் 6வது நபரை மீட்கும் பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை அருகே கடந்த 14ம் தேதி அடைமிதிப்பான் குளத்தில் உள்ள கல்குவாரியில் திடீரென்று பாறைச்சரிவினால் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் சிக்கினர். அவர்களை மீட்பதில் மீட்புப்படைக்கு சிக்கல் ஏற்பட்டது. பாறைகள் தொடர்ந்து சரிந்த வண்ணம் இருந்தது. இதனால் பாறை இடுக்குகளில் சிக்கி சிலர் தங்களின் கைகளை மட்டும் அசைத்து தங்களை காப்பாற்றும்படி கெஞ்சினர். ஆனாலும் அவர்களை மீட்பதில் சிக்கல் நீடித்தது.
இதன் பின்னர் மீட்புப்படையை சேர்ந்த சிலர் ரோப் மூலமாக கீழே இறங்கி பாறைகளில் சிக்கியவர்களில் இருவர் உயிருடனும், மூன்று பேர் இறந்த நிலையிலும் மீட்கப்பட்டனர். அதில் ஆறாவது நபரை மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக நடைபெற்று வருகிறது.
மேலும், 6வது நபர் சிக்கியிருப்பதாக கருதப்படும் லாரி கேபினுக்கு மேல் பாறைகள் கிடப்பதால் மீட்புப்பணியில் சிக்கல் எழுந்துள்ளது. விரைவில் மீட்புப்பணி துவங்கும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இருந்தாலும் அவரின் உறவினர்கள் இன்றுவரை கடுமையான மனஉளைச்சலில் தவித்து வருகின்றனர். உயிரோடு இருப்பாரா அல்லது இறந்து விட்டாரா என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது.
Source, Image Courtesy: Polimer