ராஜேந்திர சோழன் அரண்மனை பகுதியில், 8 கிராம் எடை கொண்ட தங்க காப்பு கண்டுபிடிப்பு!
By : Dhivakar
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரம் அருகே ராஜேந்திர சோழனது அரண்மனை பகுதி என்று சொல்லப்படும் மாளிகைமேட்டில் பல வரலாற்று எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மாமன்னன் ராஜராஜ சோழன் தன் நாட்டின் தலைநகராக தஞ்சையை கொண்டான். அவனது புதல்வன் ராஜேந்திரசோழன் தன் தந்தையை விட பல வெற்றிகளை சம்பாதித்து, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல இடங்களில் புலிக் கொடியை பறக்க விட்டான். வடக்கே கங்கை மன்னனை தோற்கடித்து கங்கையில் இருந்து புனித நீரை கொண்டு, தன் ஆட்சியின் புதிய தலைநகராக கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவினான். இப்படி பல எண்ணற்ற வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது ராஜேந்திர சோழனும் அவனது தலைநகரமான கங்கைகொண்ட சோழபுரமும்.
இந்நிலையில், கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகே மாளிகை மேடு என்னும் பகுதியில் ராஜேந்திர சோழனுக்கு அரண்மனை இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இதன் வரிசையில் சமீபத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம், முதல் கட்ட அகழ்வாய்வு பணியை தமிழ்நாடு தொல்லியல் துறை தொடங்கியது. அதில் பானை ஓடுகள், கூரை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலான ஓடுகள் மற்றும் சீன கலைநயமிக்க மணிகள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று எச்சங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆய்வு இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. ஆய்வின் போது சிறுசிறு எலும்பு துண்டுகள் மற்றும் மண்பாண்ட ஓடுகள் என பல முக்கிய வரலாற்று சுவடுகளை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
முக்கிய அம்சமாக 8 கிராம் எடை கொண்ட தங்க காப்பொன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன் நீளம் 4.9 மில்லி மீட்டர் அதன் தடிமன் அளவு 4 மில்லி மீட்டர் என்று கூறுகின்றனர்.
ராஜேந்திர சோழர் காலத்து வரலாற்றை அறிய பல ஆதாரங்கள் கிடைத்தாலும், மாளிகைமேட்டில் கிடைத்த இந்த வரலாற்றுச் சுவடுகள், ராஜேந்திர சோழனது வரலாற்றை தீட்ட மேலும் வலு சேர்த்துள்ளது.