அமலாக்கத்துறை கண்காணிப்பில் 9 திமுக அமைச்சர்கள்: அடுத்து என்ன நடக்கப்போகிறது? தமிழக அரசியல் களத்தில் பர பர!
By : Kathir Webdesk
பினாமிகள் பெயரில் வெளிநாடுகளில், கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படும் 9 தி.மு.க., அமைச்சர்கள் குறித்து, அமலாக்கத் துறை விசாரிக்கிறது.
9 அமைச்சர்கள், பினாமிகள் பெயரில், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்துள்ளதாகவும், அது சட்ட விரோத பணப் பரிமாற்றம் என்ற அடிப்படையிலும், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் வங்கி கணக்குகள், பினாமிகள், அவர்களுடன் அமைச்சர்கள் நடத்திய பணப் பரிமாற்றம் உள்ளிட்ட தகவல்களையும் திரட்டி வருகின்றனர்.வலுவான ஆதாரங்கள் அடிப்படையில், விரைவில் சோதனை நடக்கும் என, அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் லைக்கா படத் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த சோதனை மூலம் சில தகவல்கள் கிடைத்துள்ளன. அமைச்சர் ஒருவர் பெயர் அடிபடுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி 81 பேருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக, 1.62 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டதாக, போலீசில் புகார் செய்யப்பட்டது.
அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடையை, உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது. செந்தில் பாலாஜி மீதான விசாரணையை தொடர, அனுமதி அளித்துள்ளது.
ஓய்வுபெற்ற, டி.ஜி.பி., ஜாபர் சேட் மற்றும் அவரது மனைவிக்கு, 2006 - 11ல், தி.மு.க., ஆட்சியில், வீட்டுவசதி வாரியம் சார்பில், முறைகேடாக நிலம் ஒதுக்கப்பட்டது.
அப்போது, அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியிடம், நான்கு மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடந்தது. இந்த விசாரணையும் இப்போது வேகம் எடுத்துள்ளது.
Input From: Dinamalar