சென்னை உயர்நீதிமன்றத்தில்.. கணவன், மனைவி உட்பட 10 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு.!
சென்னை உயர்நீதிமன்றத்தில்.. கணவன், மனைவி உட்பட 10 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு.!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றி வந்த மாவட்ட முதன்மை நீதிபதிகள் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், எஸ்.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சதீஷ்குமார், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டு அதனை குடியரசுத்தலைவருக்கு பரிந்துரை செய்தது. இதனை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், 10 மாவட்ட நீதிபதிகளையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், 10 புதிய நீதிபதிகளும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகள் காணொலி மூலமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த பதவி ஏற்பு நிகழ்வை ‘யூடியூப்’ மூலம் பொதுமக்களும் பார்க்கும் விதமான உயர்நீதிமன்ற பதிவுத்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது. புதிய நீதிபதிகளில் கே.முரளிசங்கர், டி.வி.தமிழ்ச்செல்வி இரண்டு பேர் கணவன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.