தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி.. ரசிகர்கள் குதூகலம்.!
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி.. ரசிகர்கள் குதூகலம்.!
By : Kathir Webdesk
தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதியளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த 6 மாதத்திற்கு மேலாகவும் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தது. அதன் பின் தமிழகத்தில் நவம்பர் 10ம் தேதி முதல் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டது.
ஆனால், 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதன் பின்பு டிசம்பரில் 75 சதவீதம், ஜனவரியில் 100 சதவீதம் என மாற்ற வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் 50 சதவீத நிலையிலிருந்து அதை மாற்றும் உத்தரவை அரசு வெளியிடவில்லை.
இந்நிலையில், நடிகர் விஜய் தமிழக முதல்வரைச் சந்தித்து 100 சதவீத இருக்கை அனுமதிக்கு கோரிக்கை விடுத்தார். இன்று நடிகர் சிம்புவும் அது போன்றதொரு கோரிக்கையை கடிதம் மூலம் விடுத்துள்ளார். ஜனவரி 13ம் தேதி விஜயின் மாஸ்டர் படமும், அதற்கு அடுத்த நாளான 14ம் தேதி சிம்புவின் ஈஸ்வரன் திரைப்படமும் வெளிவருகிறது. அதற்குள் அரசு அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதியளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து 100 சதவீத இருக்கையுடன் திரையிடப்பட அனுமதியளிக்கப்பட்டதால் தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த பொங்கல் அன்று ரசிகர்கள் அனைவரும் உற்சாகமுடன் படம் பார்ப்பார்கள் என தியேட்டர் உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.