ஊக்கால் முகப்பருவை அகற்றிய ஆசிரியர்: பரிதாபமாக 10ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு! காவல் நிலையத்தில் பெற்றோர் புகார்!
By : Thangavelu
பத்தாம் வகுப்பு மாணவன் முகத்தில் முகப்பரு கட்டி இருந்துள்ளது. இதனால் அவர் அவதியுற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆசிரியர் ஊக்கால் குத்தி அகற்றியுள்ள நிலையில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்து ஜவ்வாதுமலையில் அரசவெளி என்ற மலைக்கிராமம் உள்ளது. அங்கு அரசு உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 100க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அதே போன்று நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த செவத்தான் என்பவரின் மகன் சிவகாசி 15, இவர் அப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் முகத்தில் முகப்பரு கட்டி இருந்துள்ளது. இதனால் மாணவன் அவதியுற்று வந்துள்ளார். இதனிடையே கடந்த 28.06.2022ம் தேதி பள்ளியில் பணி புரிந்து வந்த ஆசிரியை மகாலட்சுமி மாணவனின் முகத்தில் ஊக்கால் குத்தியுள்ளார். இதனால் மாணவனின் முகம் வீக்கம் அதிகமாகி உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிரியர் சிவகாசியின் தந்தைக்கு இரவு 9 மணியளவில் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு சிவகாசியின் முகம் வீங்கியிருக்கிறது. இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடனே அழைத்து செல்லுங்கள் என கூறியுள்ளார்.
இதனால் பதறிப்போன சிவகாசியின் தந்தை பள்ளிக்கு சென்று, மாணவனை அழைத்து சென்றுள்ளார். இதன் பின்னர் நம்மியம்பட்டில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்துள்ளார். அதனை தொடர்ந்து மாணவனின் முகம் மோசமடைந்து மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் மாணவன் எழுந்த நடக்க முடியாமல் வீட்டிலேயே படுத்த படிக்கையாக இருந்தாக கூறப்படுகிறது.
உடனடியாக சிவகாசியின் பெற்றோர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அவர் உடனடியாக அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் ஜூன் 30ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமனாமரத்தூர் காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் முகபருவினால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu