Kathir News
Begin typing your search above and press return to search.

கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு இல்லை: 11ம் வகுப்புக்கு மட்டும் நுழைவுத் தேர்வா.. தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி.!

தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் சேர, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்திருக்கிறார். இது சமூகநீதிக்கு எதிரானது.

கல்லூரிக்கு நுழைவுத்தேர்வு இல்லை: 11ம் வகுப்புக்கு மட்டும் நுழைவுத் தேர்வா.. தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி.!

ThangaveluBy : Thangavelu

  |  9 Jun 2021 10:20 AM GMT

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் சேர, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்திருக்கிறார். இது சமூகநீதிக்கு எதிரானது.

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 10 முதல் 15% மாணவர்களை சேர்க்கலாம்;அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு இணையாகவோ, அதைவிட குறைவாகவோ விண்ணப்பம் பெறப்பட்டால், நுழைவுத்தேர்வின்றி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பிரிவை ஒதுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 வினாக்களைக் கொண்ட, சரியான விடையை தேர்வு செய்யும் முறையிலான, நுழைவுத் தேர்வை சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி, மாணவர்களை தேர்ந்தெடுக்கலாம் என பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார்.




தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்த பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப் படக்கூடாது என்பது தான் தங்களின் கொள்கை என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் தேர்தலின் போது வாக்குறுதி அளித்தது. தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும் கூட, கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரு நாட்களுக்கு முன்பு தான் அறிவித்திருந்தார். கல்லூரி மாணவர் சேர்க்கைக்கே நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது என்று வலியுறுத்தும் திமுக அரசு, 11-ஆம் வகுப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? சமூகநீதிக்கு எதிரான இத்தேர்வை எப்படி ஏற்க முடியும்?




தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் 22.03.2021 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களை ஏமாற்றும், திசை திருப்பும் செயலாகும். தமிழக அரசு சுட்டிக்காட்டும் வழக்கு என்பது 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்து விட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஆகும். 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை சோதிக்க பள்ளி அளவில் சிறிய தேர்வு நடத்தி, அதனடிப்படையில் தான் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும் என்ற தனியார் பள்ளிகளின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அப்படியானால், 11-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின் போது அவர்களின் திறனை சோதிக்க சில வினாக்களை கேட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிய போது, அதை ஆன்லைனிலோ, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டால் நேரடியாகவோ செய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர். இது தனியார் பள்ளிகளுக்கு மட்டும் தான். அதையும் கூட ஓர் ஆலோசனையாகத் தான் நீதிபதிகள் கூறினரே தவிர, ஆணையாக பிறப்பிக்கவில்லை.




அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை நீதிமன்றம் எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது அனைத்து பள்ளிகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்த அரசு துடிப்பது தவறு. அதுவும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டால் மட்டுமே நேரடியாக வினாக்கள் எழுப்பப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள போதிலும், கடுமையான கொரோனா அச்சம் நிலவும் நிலையில் நேரடியாக நுழைவுத்தேர்வை நடத்தி, அடுத்த வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை முடித்து பாட வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் கூறியிருப்பது மாணவர் நலனுக்கு எதிரானதாகும்.

11-ஆம் வகுப்புக்கு அவசர அவசரமாக நுழைவுத்தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை முடிப்பதற்கு அரசு துடிப்பது ஏன்? எனத் தெரியவில்லை. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவை வெளியிடப்பட்ட பிறகு, அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவது தான் சரியானதாக இருக்கும். கடந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பருவத் தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களின்படி தான் 11-ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால், இப்போது பொருந்தாத ஒரு தீர்ப்பைக் காரணம் காட்டி அந்த நடைமுறையை மாற்றக்கூடாது.




எந்தப் படிப்புக்கும் நுழைவுத்தேர்வு கூடாது என்பது தான் தங்களின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறுகிறார். நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வும் நடத்தக்கூடாது என்று கடந்த 5&ஆம் நாள் நான் வலியுறுத்திய நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுகிறார். ஒருபுறம் இவையெல்லாம் நடக்கும் நிலையில் மற்றொருபுறம் மாநில அரசு பள்ளிகளில் 11&ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? இது தான் சமூகநீதியை பாதுகாக்கும் வழியா?

கல்லூரிப் படிப்புக்கே நுழைவுத்தேர்வு கூடாது என்ற நிலையில், பள்ளிப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு நடத்தி, தவறான முன்னுதாரணத்தை தமிழக அரசு ஏற்படுத்தி விடக்கூடாது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்புக்கு கடந்த ஆண்டு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதோ, அதே போல் நடப்பாண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News