12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை.!
அதே நேரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பொதுத் தேர்வு என்பதால் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தினமும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பி வைத்து வருவதாக பெற்றோர்கள் வருத்தத்தோடு தெரிவித்துள்ளனர்.
By : Thangavelu
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், 9,10,11ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனிடையே 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மீண்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு 9, 10, 11
ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைவதுடன், மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளித்துள்ளது.
அதே நேரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் தமிழகத்தில் கொரோனா ஏறுமுகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பொதுத் தேர்வு என்பதால் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை தினமும் அச்சத்தோடு பள்ளிக்கு அனுப்பி வைத்து வருவதாக பெற்றோர்கள் வருத்தத்தோடு தெரிவித்துள்ளனர்.
எனவே பெற்றோர்களின் அச்சத்தை போக்கவும், மாணவர்களின் நலன் கருதியும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கி இந்த முறை பொதுத் தேர்வை ஆன்லைன் அல்லது பள்ளி அளவில் தேர்வுகளை நடத்துவதற்கு பரிசீலிக்க ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.