14 மணி நேரம் போராட்டம்.. கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட யானை.. மீண்டும் வனத்துக்கு சென்றது.!
14 மணி நேரம் போராட்டம்.. கிணற்றில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட யானை.. மீண்டும் வனத்துக்கு சென்றது.!
By : Kathir Webdesk
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பஞ்சப்பள்ளியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து சுமார் 14 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண் யானை பத்திரமாக வனப்பகுதிக்குள் விடப்பட்டுள்ளது.
பஞ்சப்பள்ளி காப்பு காட்டில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளது. இந்த காட்டில் போதுமான உணவு இல்லை என்றால் அருகில் உள்ள வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு செல்வது வழக்கம். அது போன்று பெண் யானை ஒன்று உணவு தேடி வந்தபோது, வெங்கடாசலம் என்பவரின் விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தது. காலை 6 மணியளவில் தொடங்கிய மீட்பு பணி இரவு 8.30 மணி வரை நீடித்தது. 2 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டு, 2 கிரேன் இயந்திரங்கள் உதவியுடன் கயிறு கட்டி யானையை மீட்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கிணற்றில் இருந்து மீட்கும்போது தவறுதலாக யானை கீழே விழுந்தது. இதனிடையே மீண்டும் ரோப் மூலம் யானையின் கால்களை இறுக்கமாக கட்டி மேலே தூக்கப்பட்டது. இதில யானை பத்திரமாக மேலே கொண்டு வரப்பட்டது. யானைக்கு லேசான சிராய்வுகள் மட்டுமே இருந்தது.
உடனடியாக கால் நடை மருத்துவர்கள் அதற்கு காயங்கள் ஏதேனும் உள்ளதா என்று ஆய்வு பார்வையிட்டனர். பின்னர் காயங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து யானைக்கு சாப்பிடுவதற்கு தென்னங்கீற்று மற்றும் பழங்கள் கொடுக்கப்பட்டது.
யானை பசியில் இருந்ததால் அனைத்தும் சாப்பிட்டது. இதன் பின்னர் சற்று ஓய்வு எடுத்தது. யானையின் அசைவுகளை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனையடுத்து யானை மாரண்டஅள்ளி அருகே உள்ள காப்புக்காட்டில் பத்திரமாக கொண்டு சென்று விட்டனர். யானை நலமுடன் உள்ளதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானையை மீட்பதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் அனைத்து ஈடுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. யானையை உயிருடன் மீட்ட வனத்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.